ந.பாலகிருஷ்ணன் (ந.பச்சைபாலன்)

தலைவர், அறம் செய்வோம் இயக்கம்

அனைவருக்கும் அன்பு வணக்கம். 


7 ஆண்டுகளாக தன்னார்வ அடிப்படையில் அறப்பணிகளை மேற்கொண்டு வந்த நாம், அறம் செய்வோம்  இயக்கம் எனும் பதிவு பெற்ற இயக்கமாக ஈராண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் பயணத்தைத் தொடர்கிறோம். கடந்தாண்டு உறுப்பினர் எண்ணிக்கை 72. இப்பொழுது எண்ணிக்கை 109ஆக (2025) உயர்ந்துள்ளது. 

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்  (குறள் 33)

அறம் மனத்தளவில் மட்டும் போதாது; செயலிலும் வேண்டும் அதனால் அறச்செயல்களை, இடையறாது இயன்றவரை, செய்யக்கூடிய வழிகளிலெல்லாம் செய்க எனும் வள்ளுவனின் திருக்குறளை மனத்திலேந்தி அறப்பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 

கல்வி, மருத்துவம், சிறுவணிகம், ஆபத்து, அவசரத் தேவை போன்றவற்றுக்கு உதவி கேட்டு நம்மை நாடி வருவோர்க்கு நிதி வழங்கிக் கைகொடுப்பதே நம் இயக்கத்தின் நோக்கமாகும். அதன்படி 2024இல் 170 பேருக்கு உதவியுள்ளோம். இந்த நோக்கத்தில் இருந்து இம்மியும் விலகாமல் இயக்க உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடைகளை நாம் வகுத்துள்ள நோக்கத்திற்கே முழுமையாகப் பயன்படுத்தி வருகிறோம். தீபாவளியைக் கொண்டாடும் வசதி குறைந்தோரின் தேவையைக் கருத்திற்கொண்டு மளிகைப் பொருள்களும் பண உதவியும் வழங்கி வருகிறோம். 

நம் இயக்கத்திற்கு நிதி சேர்க்கும் முயற்சியாக 4 நூல்களை வெளியிட்டோம். நூல்களை அச்சிடும் முழுச் செலவை நன்கொடையாளர்கள் ஏற்றுக்கொண்டனர். நூல் வெளியீட்டு விழா மூலமும் அதனைத் தொடர்ந்து நூல்கள் விற்பனை வழியும் ரி.ம.41 445.95 திரட்டியுள்ளோம். இத்திட்டம் வெற்றிபெற துணைநின்ற அனைவருக்கும் நன்றி நவில்கிறோம்.

அறம் செய்வோம் இயக்கம் சீராகச்  செயல்பட வழிகாட்டி வரும் ஆலோசகர்களான டாக்டர் முகமட் நோர் மனுகரன், சிவகுமாரன் நடராஜா ஆகியோருக்கும் ஒத்துழைப்பு வழங்கிவரும் செயற்குழு நண்பர்களுக்கும் நன்றி. 

அறம் செய்வோம் இயக்க உறுப்பினர்கள் மாதந்தோறும் வழங்கிவரும் சந்தாவும் நன்கொடைகளும் இன்றி நாம் தொடர்ந்து அறப்பணிகள் மேற்கொள்ள இயலா. நீர்த்துளிகள் சேர்ந்து மழையாவதுபோல், பூக்கள் சேர்ந்து மாலையாவதுபோல் ஒவ்வொருவரும் வழங்கும் நன்கொடைகளே நம் அறப்பணிகளுக்கு  அடிப்படையாக விளங்குகின்றன. 2025இல் அனைவரின் பங்களிப்பும் தொடர வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அறத்தான் வருவதே இன்பம் என்போம்!

அறப்பணி தளராது  என்றும் தொடர்வோம்!

அறப்பணியில் மனநிறைவோடு, 

ந.பச்சைபாலன்